Friday, 11 July 2014

இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை

உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் மக்கள் விகிதம் 1:1500 ஆக இருக்கும் பொழுது, இந்திய மருத்துவ கவுன்சில் சிலமாதங்கள் முன்பு வெளியிட்ட 'விஷன் 2015' அறிக்கை, இந்தியாவில் 1:1700 தான் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. 356 மருத்துவ கல்லூரிகளைக் கொண்டு மருத்துவத்துறையில் முதன்மை இடத்தில் இருக்கும்    இந்தியாவில் இந்த நிலைமை என்பது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கிறது. 

மருத்துவர் மக்கள் விகிதம் (ஆண்டுகளில்)
அதிகளவில் மருத்துவ கல்லூரிகள் இருக்கும் போதும் ஏன் இந்த பற்றாக்குறை என்பது சிந்திக்கத்தக்கது. சில ஆண்டுகளாகவே இந்தியாவின் மருத்துவத்துறை விரிவாக்கம் பெற்றது மட்டுமன்றி அதிகளவில் தனியார்  மயமாக்கவும் பட்டிருக்கின்றது. மொத்தம் 356 மருதுவக்கல்லூரிகளில் 164 மட்டுமே அரசு சார்ந்தது, 194 தனியார் மருத்துவ கல்லூரிகள். அதுமட்டுமன்றி, மருத்துவக்கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு 46,300 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் முதுநிலை பட்டப்படிபிற்கோ 22,000 இடங்களே உள்ளன. இந்த பரந்த வேறுபாடே இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறைக்கு காரணம். நுழைவுத்தேர்வு பல மருத்துவப் பட்டதாரிகளை முன்னேற விடாமல் முடக்குகிறது.

"பல விதங்களில் இந்த வடிகட்டும் செயல் நடைபெறுகிறது, அதிக அளவில் போட்டி, ஜாதி சார்ந்த இட ஒதுக்கிடு, குறைந்த முதுநிலை இடங்கள் இவை திறன் இருக்கும் பட்டதாரிகளுக்கு இடர் சேர்கின்றன. பொது நுழைவுத்தேர்வைக் கடந்து வந்தாலும் பலரால் பிடித்த துறையில் படிக்க முடிவதில்லை, இதனால் மருத்துவம் படித்த மாணவர்கள் சிலர் தங்கள் துறைகளையே மாற்றிக் கொள்கிறார்கள்” என்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி ஜனனி.

இந்தியாவில் உள்ள மூத்த மருத்துவர்கள் ஓய்வு பெறும் நிலையில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களிலும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.  

மறுபுறம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பின் இடங்களின் எண்ணிக்கையை சமன் செய்வது சரியா என்ற கேள்வி எழுகிறது. பல நிபுணர்களின் கருத்து என்னவென்றால், "இது மட்டும் முழுமையான தீர்வு ஆகாது. இதை தவிர முதுகலை பட்டப்படிப்பில் எண்ணிக்கையை  உயர்த்துவது கல்வித்தரம் குறைவதற்கும் வழிவகுக்கிறது. இதற்கு பதிலாக நவீன உபகரணங்கள், உட்கட்டமைப்பை அதிகரிப்பது, தனியார் கல்லூரிகள் அல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது போன்ற செயல்களைச் செய்தால் அது இக்கட்டத்தில் உதவும்”


-ரஞ்சனி ராமநாதன்



No comments:

Post a Comment